மட்டக்களப்பில் கொலைகார தம்பதியால் பறிபோன உயிர்
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன், மனைவி இருவரும் கொடுத்த மயக்க மருந்தினால் கல்லாற்றைச் சேர்ந்த வயோதிபப் பெண் (வயது 65) நேற்று (29) உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் போராடிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவர் மீட்கப்பட்டதுடன் அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பாழடைந்த கிணற்றில் சடலம்
அத்துடன் அருகில் உள்ள வயல் பகுதியில், காப்பாற்றப்பட்ட இளம் தாயின் 3 வயது 4 மாதங்களான பெண்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்திலேயே வவுணதீவு பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அங்கு, தனது மகளை சந்திக்கச் செல்வதற்காக, பஸ் வண்டியை எதிர்பார்த்து, தனியாக காத்திருந்த வயோதிபப் பெண்ணிடம் பேசி மயக்க மருந்து கலக்கப்பட்ட பழச்சாற்றை பருகக் கொடுத்துள்ளனர்.
அத்துடன், “கவனம் அம்மா, இங்கே கள்ளர்கள் நடமாட்டம் அதிகம். கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு போய்விடுவார்கள்” என அறிவுரை கூறியுள்ளனர்.
இதையடுத்து, அந்த வயோதிபப் பெண், தனது கையில் இருந்த 2 பவுண் வளையல், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுண் தங்கச் சங்கிலியை கழற்றி தனது கைப்பையில் வைத்துள்ளார்.
மயக்க மருந்து கலக்கப்பட்ட பழச்சாற்றை குடித்து சிறிது நேரத்தில் மயக்கமுற்றதும், அவரது தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
அதன் பிறகு, சுமார் 4 மணித்தியாலத்தின் பின்னர், குறித்த பெண் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நீரிழிவு நோயாளியான அந்த வயோதிபப் பெண், அதன் பின்னர், மன, உடல் ரீதியாக நோய்வாய்ப்பட்டு, சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (29) உயிரிழந்தார். சந்தேக நபர்கள் கொடுத்த மயக்க மருந்து காரணமாகவே அந்தப் பெண் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.