கொழும்பில் விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய பெண் உட்பட மூவர்!
கொழும்பு – 9, தெமட்டைகொட வஜிரஞான வீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 31,500 ரூபா பணத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினரால் நேற்று (14) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அங்கொட – முல்லேரியா பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 70 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிதம்பரபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் வவுனியா – சிதம்பரபுறம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சுற்றிவளைப்புக்களின்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் முழுப்பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபாவாகும்.
இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருடன் அந்தந்த பொலிஸ் நிலையங்களும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெறுபவர்கள் 1997 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்க முடியும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.