எரிபொருள் விலை குறையுமா? ; எரிபொருள் விலை நிர்ணயத்துக்குப் புதிய திட்டம்
எரிபொருள் விலை நிர்ணயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவது, பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்று அந்த ஆணைக்குழு கருதுகிறது.
இதன் மூலம் உண்மையான செலவுகள் மற்றும் நியாயமான இலாப வரம்புகளின் அடிப்படையில், தெளிவான மற்றும் வெளிப்படையான முறையில் முடிவுகளை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மின்சாரம், பெற்றோலியம் மற்றும் குடிநீர் ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல்துறை ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதே நோக்கமாக இருந்தது.

2004ஆம் ஆண்டிலேயே பெற்றோலியம் மற்றும் குடிநீர் துறைகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கான சட்ட விதிகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனால் தற்போது மின்சாரத் துறையை ஒழுங்குபடுத்துவதோடு மட்டுமே ஆணைக்குழுவின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் கொள்கை பிரகடனத்தில், எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் தற்போது எவ்வாறு ஒரு வெளிப்படையான சூத்திரத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகிறதோ, அதேபோன்ற முறையை எரிபொருளுக்கும் அமல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் நியாயமான காரணங்களுக்காக மாற்றப்படும்போது பொதுமக்கள் அதனை ஏற்றுக்கொள்கின்றனர்; ஏனெனில் அந்தச் செயல்முறை நம்பகமானது மற்றும் தெளிவானது.
தற்போது எரிபொருள் விலை நிர்ணயத்தில் ஆணைக்குழுவிற்கு எந்தப் பங்கும் இல்லை. முடிவுகள் எரிசக்தி அமைச்சினால் எடுக்கப்படுகின்றன.
தற்போதைய முறையில் தெளிவு இல்லாததால், உலகச் சந்தை மாற்றங்களை இது சரியாகப் பிரதிபலிக்கிறதா என்ற சந்தேகம் மக்களிடையே நிலவுகிறது.
விலை நிர்ணய சூத்திரம் வெளிப்படையானதாக இருந்தால், விலை அதிகரிக்கப்பட வேண்டிய சூழலில் அதனை மக்களுக்குத் தெளிவாக விளக்க முடியும்.
இது அரசாங்கத்திற்கும் நுகர்வோருக்கும் இடையே உள்ள சந்தேகங்களைக் குறைக்க உதவும்.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், எரிபொருள் விலை மாற்றங்கள் தொடர்பான பொதுமக்களின் அதிருப்தி பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.