பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி
நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் எந்த வித தயக்கமும் இன்றி உறுதியான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்பாகமுவையில்இன்று நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாதாள உலகக் குழுக்களின் கைவசம் உள்ள அபாயகரமான ஆயுதப் பிரயோகம் குறித்துச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 93 T-56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிக்கவெரட்டிய காவல் நிலையத்தில் கூட இவ்வளவு T-56 துப்பாக்கிகள் இல்லை என்றும்,அத்தனை ஆயுதங்கள் பாதாள உலகக் கும்பலிடம் இருந்துள்ளன என்றும், அதுமட்டுமன்றி தற்போது வரை 139 துப்பாக்கிகள் மற்றும் 104 ரிவோல்வர்கள் எம்மால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பாதாள உலகத்தின் பிடி எந்தளவுக்கு வேரூன்றியிருந்தது என்பதற்கு இதுவே சான்று என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கலாச்சாரத்திற்கு அரச கட்டமைப்புக்குள்ளேயே பாதுகாப்பு இருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, காவல்துறையிலும் சில அரசாங்க நிறுவனங்களிலும்கூட இத்தகைய குற்றவாளிகளுக்குச் சிறிய அளவிலான அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், இப்போது தாங்கள் அந்தப் பாதுகாப்பை முழுமையாக இல்லாதொழித்து வருவதாகவும், பாதாள உலகத்திற்கு எதிரான இந்த மோதலுக்கு நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்வும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாதாள உலகக் குழுக்கள், அரசாங்கத்தை வீழ்த்தப் போதைப்பொருள் பணத்தைப் பயன்படுத்தி வருவதாக ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.
தாங்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.
குறிப்பாக சில ஆர்ப்பாட்டங்களுக்கும் பேரணிகளுக்கும், சில இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் போதைப்பொருள் பணத்தை இறைக்கிறார்கள்.
அரசாங்கத்தைத் தாக்குங்கள், அரசாங்கத்தை விரட்டுங்கள் என அவர்கள் எதற்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், அது வேறொன்றுக்காகவும் அல்ல, தங்களின் பாதாள உலகத்தையும் போதைப்பொருள் பேரரசையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இதைச் செய்கிறார்கள் என்று அவர் விளக்கினார்.
எத்தகைய எதிர்ப்புகள் மற்றும் சதித்திட்டங்கள் வந்தபோதிலும், நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் அமைதியையும் உறுதிப்படுத்த பாதாள உலகத்தையும் போதைப்பொருள் ஒழிப்பையும் முழுமையாக நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தினார்.