ராஜபக்ஷ விமான நிலையத்தில் வனவிலங்குத் திணைக்கள அலுவலகம்!
அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் (Mattala Rajapaksa International Airport) வனவிலங்குத் திணைக்களத்திற்கான ஒரு தனியான அலுவலகத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
விமான நிலைய வளாகத்திற்குள் காட்டு யானைகள் மற்றும் ஏனைய வனவிலங்குகள் மீண்டும் மீண்டும் அத்துமீறி நுழைவதாலும் மற்றும் விமான நிலையத்தை அணுகும் வீதிகளை விலங்குகள் கடப்பதாலும் எழுந்த தொடர்ச்சியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய பாதுகாப்பை உறுதி செய்யவும் கவனம்
வனவிலங்கு அத்துமீறல்கள் விமான நிலையத்தின் உள்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதுடன், விமான நிலையத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் பல தடையை ஏற்படுத்தின.
இதனால், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு கணிசமான பழுதுபார்ப்புச் செலவுகளும் ஏற்பட்டன.
அதேவேளை புதிதாக நிறுவப்படும் இந்த அலுவலகம், வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் நிர்வகிக்கவும், அவற்றின் தாக்குதல்களைத் தடுக்கவும், பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கவனம் செலுத்தும்.
மேலும் இந்த நடவடிக்கை மூலம், விமான நிலைய நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, தடையற்ற விமான சேவைகளைப் பராமரிக்க முடியும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.