கட்டுநாயக்க ஊடாக விமானப் போக்குவரத்து அதிகரிப்பு
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், விமானப் போக்குவரத்தில் 14.4 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 44,185 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க வளர்ச்சி
அதேவேளை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 38,607 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன.
இவ்வாண்டில் ஆகஸ்ட் மாதம் அதிகபட்ச மாதாந்திரப் போக்குவரத்தைப் பதிவு செய்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5,976 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு, எதிர்வரும் சுற்றுலாப் பயணிகளின் பருவத்தை முன்னிட்டு அதிகரித்துள்ளமையே காரணம் என விமான நிலைய அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
அதேசமயம் அதிகரித்த இந்த விமானப் போக்குவரத்தை திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும், உச்ச பயணக் காலப்பகுதியில் பயணிகளுக்குத் திறமையான சேவையை உறுதிப்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.