காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளான 240 பாடசாலைகள்! அதிர்ச்சி தகவல்
வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் வடமேல் மாகாணத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளான 240 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளாகவும், காட்டு யானைகள் பாடசாலை மைதானத்திற்குள் நேரடியாக பிரவேசிக்கும் பாடசாலைகளாகவும் இனங்காணப்பட்டுள்ளன.
இதன்படி, யானைகள் அச்சுறுத்தும் அபாய வலயங்களில் வடமேல் மாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 179 பாடசாலைகள் அமைந்துள்ளதாகவும், மேலும் 61 பாடசாலைகள் காட்டு யானைகள் நேரடியாக உட்புகும் பாடசாலைகளாக இனங்காணப்பட்டுள்ளன குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ கல்வி வலயத்தில் சில காலமாக யானைகளின் அச்சுறுத்தல் இல்லாமல் இருந்த 4 பாடசாலைகள் தற்போது யானை அச்சுறுத்தலுக்கு உள்ளான பாடசாலைகளாக இனங்காணப்பட்டுள்ளன.
குருநாகல் மாவட்டத்திற்குட்பட்ட மஹவ கல்வி வலயத்திலுள்ள 86 பாடசாலைகள் யானை அச்சுறுத்தல் உள்ள இடங்களில் காணப்படுவதாகவும், மேலும் 38 பாடசாலைகள் யானைகள் அதிகம் உட்புகும் பாடசாலைகளாகவும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் முதிதா ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மேலும், நிகவெரட்டிய கல்வி வலயத்தில் 57 பாடசாலைகள் யானைகளின் அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களில் அமைந்துள்ளதாகவும் அவர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட 32 பாடசாலைகள் யானைகளினால் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் அபாயகரமான பிரதேசங்களில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய மாகாண பணிப்பாளர், மேலும் 23 பாடசாலைகளுக்கு காட்டு யானைகள் வருகை தருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி பாடசாலைகளுக்கு காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருந்த போதிலும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அந்தப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் மாகாண கல்வி பணிப்பாளர் கூறியுள்ளார்.
எனினும் குறித்த காட்டு யானைகளின் தாக்குதலினால் பல பாடசாலைகளின் பௌதீக வளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்
காட்டு யானைகள் பாடசாலை மைதானத்திற்குள் புகுந்து பௌதீக வளங்களை சேதப்படுத்துவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இதன் காரணமாக பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்களைப் பாதுகாக்கும் வகையில் பாடசாலையை சுற்றி பாதுகாப்பு மின்சார வேலிகளை அமைப்பது பொருத்தமானது என குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தியதாகவும் வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் முதிதா ஜயதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.