தமிழர் பகுதியில் வீட்டின் சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை ; விவசாயி படுகாயம்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில், விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் குடியிருப்பு ஒன்றின் சுவர்கள் இடிந்துள்ளதோடு, வாழ்வாதாரப் பயிர்களும் முழுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில், “இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சமையலறைப் பகுதியில் திடீரென பலத்த சத்தம் கேட்டது.

பதற்றமடைந்து வெளியே வந்து பார்த்தபோது, காட்டுயானை ஒன்று வீட்டின் சுவரை உடைத்துக்கொண்டிருந்தது. நாங்கள் கூச்சலிட்டதும், அது வீட்டின் மற்றொரு சுவரையும் இடித்துத் தள்ளியது.
சத்தம் கேட்டு ஓடிவந்த எனது தந்தை, இடிந்து விழுந்த சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு கந்தளாய் ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்,” எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
நன்கு காய்த்துக்கொண்டிருந்த சுமார் 12 தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மனித–யானை மோதலால் தொடர்ந்து பாதிக்கப்படும் தங்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம மக்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாக்கச் செயற்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.