தொடருந்துடன் மோதி காட்டு யானை உயிரிழப்பு
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இரவு நேரத் தபால் தொடருந்து, கிதுல்உத்துவ 151 ஆம் மைல்கல் அருகே காட்டு யானையொன்றுடன் மோதி இன்று அதிகாலை 5:10 மணியளவில் தடம் புரண்டுள்ளது.
தொடருந்தின் இயந்திரப் பகுதியில் காட்டு யானை மோதியுள்ளது.

யானையின் பாதப் பகுதிகள் இயந்திரத்தில் சிக்கியதன் காரணமாகவே இந்தத் தடம் புரள்வு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த காட்டு யானை சுமார் 15 வயதுடையது எனவும், 7 அடி உயரம் கொண்டது எனவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கவுடுல்ல காப்பகத்திலிருந்து சோமாவதிய காப்பகத்திற்கு யானை இடம் பெயர முயன்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தற்போதுவரை தொடருந்து விபத்து நடந்த இடத்திலேயே தடம் புரண்ட நிலையில் இருப்பதாகவும், அதனை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொடருந்து திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.