வெளிநாட்டில் கணவன்... தற்கொலை செய்வது போல நடிக்க முயன்ற இளம் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்வது போல நடிக்க முயற்சித்த மனைவி நிஜமாகவே உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதோடு, கணவர் உதவியுடன் வீட்டின் பின்புறம் மற்றுமொரு அழகான வீட்டையும் கட்டியுள்ளார்.
புது வீட்டின் புதுமனை புகுவிழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 04ஆம் திகதி, குறித்த பெண் தன் கணவருக்கு வீடியோ கால் செய்து விட்டு, தனது அறையில் உள்ள படுக்கையில் கதிரையை வைத்து, அதன் மேல் ஏறி, மேற்கூரையில் தொங்கிய கயிற்றை கழுத்தில் போட்டு, போலியாக தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதன்போது, எதிர்பாராத விதமாக கதிரை கவிழ்ந்ததில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.