கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மனைவி
இந்தியா கர்நாடகா மாநிலத்தின் பெலசாளி பகுதியைச் சேர்ந்த சந்தீப் (46) என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை, அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் இணைந்து திட்டமிட்டு நடத்தியது என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆயுள் காப்பீட்டு
சந்தீப் ராணுவத்தில் பணியாற்றி வந்த காலத்தில், அவரது மனைவி சுமாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த டோம்பர் என்பவருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சந்தீப் தனது பெயரில் ரூ.2 கோடி மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருந்தார்.

கடந்த மார்ச் 5 ஆம் திகதி சந்தீப் சாலை விபத்தில் காயமடைந்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, காப்பீட்டு தொகையை பெறுவதற்காக கணவரை கொலை செய்ய சுமா மற்றும் அவரது கள்ளக்காதலன் திட்டமிட்டதாக பொலிஸ் தெரிவித்தனர்.
அதன்படி, மார்ச் 15 ஆம் திகதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தீப்புக்கு ஊசி மூலம் விஷம் செலுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டு இறுதிச் சடங்குகளும் நடத்தப்பட்டன.
பின்னர் ரூ.2 கோடி காப்பீட்டு தொகையை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சந்தீப்பின் மரணம் தொடர்பாக சந்தேகமடைந்த அவரது சகோதரி பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்தார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய பொலிஸார் சுமாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கள்ளக்காதலனுடன் இணைந்து கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுமா, அவரது கள்ளக்காதலன் டோம்பர் மற்றும் போலி ஆவணங்களை தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் நபர்கள் உட்பட மொத்தம் 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.