பிள்ளையானின் சகா மௌலானாவுக்கு உண்மையிலேயே என்ன நடந்தது?
TMVP என்ற அமைப்பின் கொள்கைப்பரப்பு செயலாளரான் ஆசாத் மெலானா தொடர்பாக அந்த அமைப்பின் ஊடகச் செயலாளர் மதி குமாரதுரை நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றது.
'எமது கட்சியின் முக்கியஸ்தர் ஆசாத் மௌலானா அவர்கள் பற்றி ஊடகங்களினால் திரிபுபடுத்தப்பட்டு வெளிவந்த செய்திகள் தொடர்பில்....; என்று தலைப்பிட்டு மதி குமாரதுரை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக செயற்பட்டுவந்த ஆசாத் மௌலானா அவர்கள் தொடர்பாக பல உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருவதாகவும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, TMVP அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தனது அறிக்கையின் ஊடாக முக்கியமாக இரண்டு விடயங்களைக் கூறியுள்ளார்.
- TMVP அமைப்பின் செயலாளர் ஆசத் மெலானா தற்பொழுது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்
- ஆசத் மெலானா பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது.
மதி குமாரதுரையின் ஊடக அறிக்கை வெளிவந்ததைத் தொடர்ந்து இலங்கையில் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவருகின்ற அனைத்து ஊடகங்களிலும் ஆசாத் மெலானா தொடர்பான செய்திகளை தேடினோம்.
ஆனால், எந்த ஒரு ஊடகத்திலும் அண்மைக் காலத்தில் அப்படியான ஒரு செய்தி வெளிவந்ததாகத் தெரியவில்லை.
இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற பொருளாதாரப் பிரச்சனைகள், அதனை அடிப்படையாக வைத்து நடந்துவருகின்ற போராட்டங்கள், களோபரங்கள், அரசியல் நகர்வுகள் இவைகள் பற்றிய செய்திகளே அனைத்து ஊடகங்களிலும் கடந்த 50 நாட்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றனவே தவிர, ஆசாத் மெலானா வெளிநாடு சென்றுவிட்டதான எந்தச் செய்தியும் எந்தவொரு ஊடகத் தளத்திலும் வெளியிடப்படவில்லை.
எந்த முகாந்திரமும் இல்லாமல் திடீரென்று ரீ.எம்விபி அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஊடக அறிக்கை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றது. கேள்விகளையும் ஏற்படுத்துகின்றது.
- ஏன் அசாத் மௌலானா வெளிநாடு சென்றுவிட்டதாக ரீ.எம்.வி.பி அமைப்பு ஒரு ஊடக அறிக்கையை வலிந்து வெளியிட வேண்டும்?
- பல்வேறு கொலைகளிலும், ஆட்கடத்தல்களிலும், கொள்ளை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த ரீ.எம்.வி.பி. அமைப்பின் பேச்சாளாராகவும், கொள்கைபரப்புச் செயலாளராகவும் ஆரம்பம் முதலே செயற்பட்டுவந்த ஆசாத் மெலானா, வெளிநாடு ஒன்றுக்குத் தப்பிச் சென்றுவிட்டாரா?
- அவ்வாறு தப்பிச் சென்ற ஆசாத் மெலானா ரீ.எம்.வீ.பி அமைப்பு மேற்கொண்ட பல்வேறு இரகசிய நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்கள் பலவற்றையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளாரா?
- மெலானவின் வாயை அடக்குவதற்கான ஒரு வழிமுறைதான் இந்த ஊடக அறிக்கையின் நோக்கமா?
- அசாத் மெலானா தங்களது தலைமைக்கு தெரிந்து, தலைமையின் அனுமதியைப் பெற்றுத்தான் வெளிநாடு என்றிருக்கின்றார் என்ற செய்தியை ரீ.எம்.வி.பி யாருக்கு சொல்ல விரும்புகின்றது?
- 'அசாத் மொலானா பற்றி தவறான கருத்துக்களைப் பரப்பவேண்டாம் என்று ஊடகவியலாளர்களிடம் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்' என்று TMVPஇன் ஊடகப் பேச்சார் தனது அறிக்கையின் ஊடாகக் கேட்டுக்கொண்டுள்ளார். அசாத் மெலானா பற்றிய ஒரு செய்தி கூட வெளிவராத நிலையில், இப்படி கோரிக்கை விடுவது எதற்காக?
- குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவர் இந்தியாவிடம் கையளித்துவிட்டாரா என்கின்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்காகத்தான் அவர் புதுடில்லியில் நிற்பதாக அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளதா?
இந்தக் கேள்விக்கான பதில்களை TMVPஅமைப்பு வழங்கினால் இங்கு பிரசுரிக்க உதவியாக இருக்கும்.
அதேவேளை, இந்தக் கேள்விக்கான பதில்களை ஒரு ஊடகமாக நாங்களும் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
உண்மைகளைத் தேடிய இந்த ஊடகப் பயணம் பல அதிர்ச்சிகரமான பதில்களுடன் நிறைவடையும் என்று உறுதி கூறுகின்றோம்.
