வவுனியா வைத்தியசாலையில் நடந்தது என்ன? தீவிர விசாரணையில் அதிகாரிகள்!
வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சின் திடீர் முற்றுகை பிரிவினர் 3 நாள் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி பிரசவித்த குழந்தை சில மணி நேரங்களின் பின் உயிரிழந்தது. குழந்தையின் மரணத்திற்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என தெரிவித்து பாதிக்கப்பட்ட தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.
மூன்று தினங்கள் தங்கியிருந்து விசாரணை
முறைப்பாட்டிற்கு அமைவாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த சுகாதாரஅமைச்சின் கீழான திடீர் முற்றுகை பிரிவினர் கடந்த மூன்று தினங்கள் தங்கியிருந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைவாக கடந்த 5,6,7ஆம் திகதிகளில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் பதிவுகள், ஆவணங்களையும் சோதனை செய்துள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட தாயை அழைத்து சுமார் 6 மணிநேரம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
அவர்களின் இந்த சோதனை நடவடிக்கையில் வைத்தியசாலையிலுள்ள தாதியர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள், பணியாளர்கள், தாதிய பரிபாலகரின் கையொப்பம் அடங்கிய முக்கிய ஆவணங்கள், சிசு மரணமடைந்த போது கடமையில் இருந்தோர் விபரங்கள் என்பவற்றையும் பரிசோதித்துள்ளனர்.
இதேவேளை தனது குழந்தையின் மரணத்திற்கு இந்த விசாரணை முடிவில் தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாக உயிரிழந்த சிசுவின் தாயார் தெரிவித்துள்ளார்.