சம்பந்தனிடம் சஜித் கூறியது என்ன? வெளியான தகவல்!
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தற்பொழுது தகவல்வெளியாகியுள்ளது.
இதற்கமைய, இனப்பிரச்சினை விவகாரத்தில் பிளவுபடாத நாட்டுக்குள் நியாயமான முறையில் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை சகல தரப்பினருடனும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்குத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அரசியல் தீர்வு விவகாரம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு பிளவுபடாத நாட்டுக்குள் நியாயமானதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதுமான தீர்வொன்றைக் கண்டடையவேண்டியது அவசியம் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், அதற்கு பெரும்பான்மையின சமூகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாஸ, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வை எட்டுவதை முன்னிறுத்தி அனைத்துத் தரப்பினருடனும் கூட்டிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகத் தன்னிடம் உறுதியளித்ததாக இரா.சம்பந்தன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.