துப்பாக்கியைக் காட்டி கொலை முயற்சி ; அதிரடி கைதான பெண்
கல்கிஸை, பன்சல வீதிப் பகுதியில் கடந்த ஜூலை 21ஆம் திகதி அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் 48 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, இக்குற்றச் செயலுக்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியானது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரால் வழங்கப்பட்டுள்ளதுடன், ரத்மலானையைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூலமாகவே அது கைமாற்றப்பட்டுள்ளது.

விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட நேரத்தில் அப் பெண்ணிடமிருந்து 10.270 கிராம் ஐஸ் போதைப்பொருளும், இக்குற்றச் செயலுக்கான கூலியாக வழங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 35,060 ரூபாய் பணமும்பொலிஸாரினரால் கண்டெடுக்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், அன்றைய தினம் சந்தேக நபர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் ஒரு கைப்பேசி ஆகியவை மீட்கப்பட்டன.
இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள பெண் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளைத் தொடரவுள்ளதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.