அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை ; மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
அடுத்து வரும் 48 மணித்தியாலங்களுக்குள் குடா கங்கை மற்றும் மகுரு கங்கை ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிப்போர் அவசரநிலைகளை எதிர்கொள்ளும் வகையில் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.