எங்கள் கைகள் இப்போதும் துப்பாக்கியின் விசையின் மீதே உள்ளன; ஈரான் உயர் தலைவர் சபதம்! புஸ்வானமாகுமா பேச்சுவார்த்தை!
அமெரிக்க - இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரான் தியாகிகளின் மரணங்களுக்கு பழிவாங்குவோம் என்றும் ஈரானை தாக்கியவர்களை நிச்சயமாக தண்டிப்போம் என்றும் ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) கூறியுள்ளார்.
ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா காமேனி வெளியிட்ட அறிக்கையில் ,

எங்கள் கைகள் இப்போதும் துப்பாக்கியின் விசையின் மீதே உள்ளன
அமெரிக்கா - இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட எனது தந்தை அயதுல்லா அலி காமேனி மற்றும் பிற தியாகிகளின் மரணங்களுக்கு பழிவாங்குவோம்.
ஈரானை தாக்கியவர்களை நிச்சயம் தண்டிப்போம். குற்றம் செய்த ஆக்கிரமிப்பாளர்கள் தப்பிச் செல்ல ஈரான் அனுமதிக்காது.
இந்த போரில் ஏற்பட்ட ஒவ்வொரு காயத்துக்கும் இழப்பீடும் தியாகிகளுக்கு ரத்தப்பணமும் மாற்றுத்திறனாளியான முன்னாள் படைவீரர்களுக்கு மறுவாழ்வு நஷ்டஈடும் நாங்கள் நிச்சயமாக கோருவோம்.
ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை ஒரு புதிய கட்டத்துக்கு நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம். அதை நிர்வகிப்பதில் ஈரான் ஒரு புதிய கட்டத்துக்குள் நுழைகிறது. ஈரான் போரை விரும்பவில்லை என்றாலும் தனது உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
இந்த போரில் ஈரான் திட்டவட்டமாக வெற்றியாளராக திகழ்கிறது. தற்காலிக போர்நிறுத்தம் என்பது போரின் முடிவல்ல. அனைத்து இராணுவ பிரிவுகளும் உயர் தலைவரின் கட்டளையை பின்பற்றி தங்கள் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தி வைத்துள்ளன.
எங்கள் கைகள் இப்போதும் துப்பாக்கியின் விசையின் மீதே உள்ளன. எதிரி தரப்பிலிருந்து மிகச் சிறிய குற்றம் நேர்ந்தாலும் அது முழு பலத்துடன் முறியடிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அமெரிக்க - ஈரான் சமாதான பேச்சு வார்த்தை இன்று பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள நிலையில் ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா காமேனியின் இந்த அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.