யாழ்.கச்சத்தீவு ஒப்பந்தங்களை மீண்டும் திறக்க மாட்டோம் ; இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம்
யாழ்ப்பாணம் கச்சத்தீவு மற்றும் கடற்தொழில் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் அல்லது திறக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும், இலங்கையுடன் இந்தியா நல்ல இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவதாகவும் இந்திய மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையிலேயே மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது.
நீதியரசர்களான சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் ஆஜரான இந்திய சட்டமா அதிபர் ஆர். வெங்கடரமணி, இந்திய மீனவர்கள் தொடர்பான கவலைகளை இந்திய அரசு இராஜதந்திர வழிகள் மூலமாகக் கையாண்டு வருவதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறோ அல்லது அதற்கேற்பச் செயல்படுமாறு இலங்கையைக் கட்டாயப்படுத்தவோ நிர்பந்திக்கவோ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
1974 ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்குக் கச்சத்தீவு விட்டுக் கொடுக்கப்பட்டதையும், இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைக் கட்டுப்படுத்திய 1976 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தையும் எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போதே அவர் இந்த வாதங்களை முன்வைத்தார்.
இந்திய மீனவர்கள் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டும் தொடர் பிரச்சினை குறித்தும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது.
இந்தியப் பகுதியில் மீன்வளம் கணிசமாகக் குறைந்தமையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சர்வதேசக் கடல் எல்லையைக் கடக்கக் கூடாது என்பது குறித்து கடற்றொழிலாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடயே, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பி. வில்சன் வாதிடுகையில், 1974 ஆம் ஆண்டின் ஒப்பந்தமானது இந்திய நிலப்பரப்பை வேறு ஒரு நாட்டிற்கு மாற்றியமைப்பதை உள்ளடக்கியது என்பதால், அதற்கு இந்திய அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதையும் அவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
விசாரணையின் போது கருத்துத் தெரிவித்த நீதியரசர் சஞ்சய் குமார், இலங்கையில் பின்பற்றப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் காரணமாக மீன்கள் இலங்கைக் கடற்பரப்பை நோக்கி நகர்வது ஒரு காரணியாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
2008 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மனுக்கள், கச்சத்தீவு இலங்கைக்குக் கையளிக்கப்பட்டதையும் 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட மீன்பிடித் தடைகளையும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை தற்போது 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1974 மற்றும் 1976 ஆம் ஆண்டின் ஒப்பந்தங்களின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வச் செல்லுபடித் தன்மையை இந்திய உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்மானிக்கவில்லை.