நாமல் ராஜபக்ஷ தொடர்பில் அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்
நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாக சிறையில் அடைத்தால் தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழர்களும் மகிழ்வார்கள். நாமல் ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாவிடின் அவரது மனைவி அரசியலுக்கு வருவார். ஆட்சி மாற்றம் ஏற்படும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆட்சிமாற்றம்
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்று குறிப்பிட்டே ஜனாதிபதி அநுரகுமார ஆட்சிக்கு வந்தார்.ஆனால் ஆனால் 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்.
2004 சுனாமி காலத்தில் முல்லைத்தீவு மக்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று நீதிமன்றத்தை நாடினர். அதேபோன்று 2009ஆம் ஆண்டு புலிகளையும் தமிழ் மக்களையும் கொல்ல வேண்டும் என்று பேரணி சென்றனர். மஹிந்த என் நண்பர் என்றும் குறிப்பிட்டார்.
நாமல் ராஜபக்ஷ திருடர் என்றால் அவருக்கு தண்டனை வழங்குவதில் தவறில்லை. ஆனால் அமைச்சர் குமார ஜயக்கொடிகயை நிலக்கரி கொள்வனவு மோசடி விவகாரத்தில் கைது செய்யவலில்லை. அத்துடன் பிமல் ரத்நாயக்க 323 கொள்கலன்களை விடுவித்தார்.அவரும் கைது செய்யப்படவில்லை.
சட்டத்தின் முன்னால் சகலரும் சமமானவர்களாக பார்க்க வேண்டும். ஆனால் இந்த நேரத்தில் நாமலை சிறையில் அடைப்பதால் வடக்கில் உள்ள தமிழ் மக்களும், புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் மகிழ்ச்சி அடையலாம்.
நாமல் ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமல் போனால் அவரது மனைவி அரசியலுக்கு வருவார்.அப்போது ஆட்சிமாற்றம் ஏற்படும் என்றார்.