இலங்கையில் நீர் விநியோகக் கட்டுப்பாடு? அடுத்த 2 வாரங்களில் ஏற்படப்போகும் மாற்றம்
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சியான வானிலை காரணமாக, அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு சில மணிநேரம் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று (30) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இதுவரை நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போதைய வானிலை நீடித்தால் 24 மணிநேரமும் தடையற்ற நீர் விநியோகத்தைப் பேணுவது கடினமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட ஏனைய நிலையங்களின் உற்பத்தித் திறன் இதுவரை பாதிக்கப்படவில்லை என அவர் உறுதியளித்தார்.

குறிப்பாக, களனி ஆற்றில் உவர்ப்பு நீர் மட்டம் அதிகரித்துள்ள போதிலும், அது அம்பத்தலே நிலையத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது என அவர் தெரிவித்தார்.
உவர்ப்பு நீர் உட்புகுவதைத் தடுக்க தற்காலிக மணல் மூட்டைகளைக் கொண்டு தடுப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது. வரட்சியான காலநிலையால் ஆற்றின் நீர் ஓட்ட வேகம் குறைந்துள்ளதே உவர்ப்பு மட்டம் அதிகரிக்கக் காரணமாகும்.
எனினும், இந்தத் தடுப்பு அணை மூலம் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும். முகத்துவாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு நடவடிக்கைகளும் ஆற்றில் உவர்ப்பு நீர் மட்டம் அதிகரிக்க ஒரு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிலவும் வரட்சியை கருத்திற்கொண்டு பொதுமக்கள் நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.