ராமர் பாலம் இருந்ததா? தடுமாறும் இந்திய அமைச்சர்!
தமிழகத்தின் இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது என இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே உள்ள திட்டுக்களை, சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, எச்சங்கள் என்றோ கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் அந்த கட்டமைப்புகள் இருந்ததற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு அறிகுறி இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை நிறுத்திய கருணாநிதி
அதேசமயம் தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பால விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதாவது தமிழகத்தின் மிக நீண்டகால கோரிக்கை சேதுசமுத்திர கால்வாய் அமைக்க வேண்டும் என்பதுதான்.
வங்க கடலில் பயணிக்கும் கப்பல்கள் இலங்கையை சுற்றித்தான் சென்னை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ராமர் பாலம் பகுதியை ஆழப்படுத்தினால் சுமார் 400 கிமீ கடல்வழி, சுமார் 30 மணிநேர பயண செலவு குறையும். இதுதான் சேது கால்வாய் திட்டம் .
ஆனால் ராமர் பாலத்தின் பெயரால் தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அடிநாதமாக திகழ்ந்திருக்க வேண்டிய சேது கால்வாய் திட்டம் முடக்கப்பட்டது.
இந்த சர்ச்சையின் போது ராமர் என்ற ஒரு கடவுள் இருந்தாரா? அவர் பாலம் கட்ட எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார் திராவிடர் இயக்க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி.
இதற்காக அவரது தலைக்கு விலை நிர்ணயித்து தலையை வெட்ட சொன்னது இந்துத்துவா கோஷ்டி. பின்னர் நீதிமன்ற தலையீடுகளால் சேது சமுத்திர கால்வாய் திட்டம் முடங்கிவிட்டது.
சுப்பிரமணியன் சுவாமி வழக்கு
ஏற்கனவே ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ராமர் பாலம் இருந்தது என்பதற்கான ஆதாரம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசே அறிவித்திருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.