யாழில் சிவசேனை போராட்டத்தில் குழப்பம்; விரட்டி அடித்த பொலிஸார்
யாழில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசெனை அமைப்பினரின் போராடத்தை குழப்ப வந்தவர்கள் பொலிஸாரால் விரடியடிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும் யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் இன்றையதினம் (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம்
இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் , வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந் நிலையில் சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் இருந்து "கப்" ரக வாகனத்தில் வருகை தந்த குழு ஒன்று தெரேசா பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, சிவசேனை அமைப்பின் போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம் விளைவித்தனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் குழப்பம் விளைவித்த நபர்களை விரட்டினர்.