நிர்ணய விலையை மீறும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
அத்தியாவசிய பொருட்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையினை மீறுகின்ற வர்த்தகர் மற்றும் நிறுவனங்களுக்காக அறவிடப்படும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச் சட்டமூலம் திருத்தமின்றி நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டமையை அடுத்து இந்த அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தனிநபர் வியாபாரங்களுக்காக விதிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் அபராதம் 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் ஐந்து இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் இரண்டாவது தடவையாகவும் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனைசெய்யும் பட்சத்தில் 2 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்திற்காக 20 ஆயிரம் ரூபாயும் 2 இலட்சம் ரூபாய்ற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நிறுவனம் ஒன்றில் குறித்த தவறு இழைக்கப்படும் பட்சத்தில் 10 ஆயிரம் ரூபாய் என்ற தண்டப்பணம் ஒரு இலட்சம் ரூபாயாகவும் ஐந்து இலட்சமாக நிலவிய அபராதம் 50 இலட்சம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.