போலி அழைப்புக்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!
இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கடனட்டை மோசடிகள் மற்றும் காவல்துறை போன்று ஆள்மாறாட்டம் செய்து முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் இலங்கை பொலிஸார் , மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக உங்கள் கடனட்டை முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்று நடித்து மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலி குறுஞ்செய்திகள்
உங்கள் கடனட்டை முடக்கப்பட்டுள்ளது, 24 மணித்தியாலங்களுக்குள் அதனைச் சரிசெய்யாவிடில் அது ரத்து செய்யப்படும் என்றவாறு போலி இணைப்புகள் உள்ளடக்கிய குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
அந்த இணைப்புகளை அழுத்துபவர்கள் தமது தேசிய அடையாள அட்டைஇலக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை வழங்கத் தூண்டப்படுகின்றனர்.
பின்னர், மோசடிக்காரர்கள் அந்த விபரங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் OTP இலக்கத்தைப் பெற்று வங்கிக் கணக்குகளிலுள்ள பணத்தைத் திருடுகின்றனர்.
அதேவேளை வட்ஸ்அப் காணொளி அழைப்புகள் மூலம் காவல்துறை சீருடை அணிந்த நபர்கள் போன்று நடித்து மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன.
கைது செய்யப்பட்டுள்ள ஒரு குற்றவாளி உங்கள் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளார் எனக் கூறி மிரட்டி, கைது செய்யாமல் இருக்க பணத்தை அனுப்புமாறு அவர்கள் வற்புறுத்துகின்றனர்.
எனவே ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருப்பின் உடனடியாக இலங்கை CERT (011 269 1062 / incidents@cert.gov.lk) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.