பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; பெருந்தொகை பணம் பறிபோகும் அபாயம்
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரைப் பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் இணையவழி அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸ் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தினதும், பொலிஸ் மா அதிபரினதும் பெயர் மற்றும் போலியான உத்தியோகப்பூர்வ முத்திரைகளை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் இந்த மின்னஞ்சல் கணக்கு செயற்பட்டு வருகின்றமை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சைபர் பாதுகாப்பு மற்றும் திறந்த மூலங்கள் குறித்த விசாரணைப் பிரிவினரால் கண்டறியப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அச்சுறுத்தல்
இவ்வாறான போலிச் செயற்பாடுகள் பொலிஸ் நற்பெயருக்கும், பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஆகையால், உத்தியோகப்பூர்வ அதிகாரிகளின் பெயர்களில் வரும் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான அல்லது அச்சுறுத்தல் விடுக்கும் மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் வீண் அச்சம்கொள்ளத் தேவையில்லை.
அத்துடன், குறித்த மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதையோ, அவர்கள் கோரும் பணத்தைச் செலுத்துவதையோ அல்லது அந்த மின்னஞ்சல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள இணைய இணைப்புகளில் உள் நுழைவதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிக்கார மின்னஞ்சல் முகவரியினூடாக மோசடிக்கு ஆளாகியிருப்பின், அல்லது சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல் இணைப்புகளை அனுகியிருந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தெரியப்படுத்துங்கள்.
மேலும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.