கம்பஹாவில் 13 பேருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, கம்பஹா மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில், டெங்கு நோய் பரவும் ஆபத்து அதிகம் காணப்படுவதாக தெரிவிகப்பட்டுள்ளது.
இதனை , கம்பஹா சுகாதாரப் பிரிவின் நிர்வாக பொது சுகாதாரப் பரிசோதகர் சமர திவாகர நேற்று தெரிவித்தார். இதனையடுத்து, காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கம்பஹா மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள், டிரோன் கெமரா மூலம் கண்காணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, டெங்கு நோய் பரவும் வகையில் சூழலை பாரியளவில் அசுத்தமாக வைத்திருந்த 13 நபர்களுக்கு எதிராக, இன்று சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் , 14 நாட்களுக்குள் சூழலை சுத்தப்படுத்தாமல் தொடர்ந்தும் வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்ட மற்றும் கொங்கிரீட் தட்டுகள் இடப்பட்ட வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் கூரைகளில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுத்தப்படுத்தாமல் வைத்திருந்த 13 நபர்களுக்கு எதிராகவே, இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.