உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக, அருட்தந்தை சிரில் காமினி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் பின்னர் அருட்தந்தை சிரில் காமினி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். குறித்த கலந்துரையாடலின் போது, மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக அருட்தந்தை சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை மற்றும் அதற்கு பின்னரான நீதிமன்ற நடவடிக்கைகளின் அவசியத்தை தாம் வலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, இரண்டு வாரங்களுக்குள் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்ததாக அருட்தந்தை கூறினார்.
அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கை, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.