வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை; பொலிஸார் எடுக்கவுள்ள நடவடிக்கை!
நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகள் குறித்து உடனடி கவனம் செலுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
இது குறித்து சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் திணைக்களம் கடிதமும் அனுப்பி வைத்துள்ளது அக்கடிதத்தில்,
நாட்டின் சாலை வலையமைப்பை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கான நடைபாதைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அநேகமான பணத்தை செலவிட்டுள்ளது.
நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது போன்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவதுடன், நடைபாதைகளும் சேதமடைந்து வருகின்றது. இந்த நிலையை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தும், ஏற்றி, இறக்கும் அனைத்து நபர்களுக்கும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்.
எச்சரிக்கையை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்சரிக்கையை கவனிக்காதவர்கள் மீது மோட்டார் போக்குவரத்து ஆணை, தேசிய நெடுஞ்சாலை சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் பொதுச் சொத்து சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலைய பொறுபதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை அடையாளம் காண பொலிஸார் இன்று முதல் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒருவர் மதுபோதையவில் வாகனம் செலுத்தியதாக கண்டறியப்பட்டால், சாரதி அனுமதி உரிமம் இரத்து செய்யப்படும் என்பதுடன் , 25,000 ரூபா அபராதம் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.