பதுளை, நுவரெலியாவில் 20 சத வீத வாக்குப் பதிவு
இலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (07) மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்று காலை 9 மணிநேர நிலைவரப்படி, நுவரெலியா மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவும் பதுளை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6,352 அதிகாரிகள் கடமைகளில்
குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை அளித்து வருகின்றனர்.
அதன்படி இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 6,10,117 ஆகும், இதில் 18,342 பேர் அஞ்சல் வாக்காளர்களாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக நுவரெலியா மாவட்டத்தில் 6,352 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் போக்குவரத்துக்காக அரச மற்றும் தனியார் வாகனங்கள் அடங்கலாக 672 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றது.
அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.