சமூக வலைதளங்களில் வைரலான திருமணம் ; நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மணமகன்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், மணமகன் ஒருவர் சுமார் 100 அடி நீளம் கொண்ட பிரம்மாண்டமான பண மாலையை அணிந்துள்ள காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முழுவதுமாக 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு கோர்க்கப்பட்ட இந்த மாலை, மணமகனின் கழுத்திலிருந்து தொடங்கி வீதி வரை நீண்டிருந்தது.
இதனைத் தூக்கிச் செல்லவே பல நபர்கள் உதவி செய்ய வேண்டியிருந்தது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இது அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமணச் சடங்கின் பகுதி என்றும், அந்தப் பண மாலை சொந்தமானதல்ல, மாறாகத் திருமணத்திற்காக வாடகைக்குக் கொண்டு வரப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
ஆடம்பரத்தைக் காட்ட இத்தகைய செயல்கள் அரங்கேற்றப்படுவது ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், பொது இடங்களில் பணத்தை இவ்வாறு காட்சிப்படுத்துவது பாதுகாப்பு ரீதியான கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.