மாணவர்களின் தலையில் கைவைத்த சிகை அலங்கார நிலையங்களுக்கு சீல் வைப்பு!
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட இரண்டு சிகை அலங்கார நிலையங்கள் நேற்று (24) அதிகாரிகளால் அதிரடியாக மூடி முத்திரையிடப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குள் உள்ள சில சிகை அலங்கார நிலையங்களில், மாணவர்களுக்கு பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு முரணான வகையில் விசித்திரமான முறைகளில் முடி வெட்டப்படுவதாக நான்கு பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் பிரதேச சபை தவிசாளரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்திருந்தனர்.

விசித்திரமான முறைகளில் முடி வெட்டப்படுவதாக முறைப்பாடு
முறைப்பாடுகளைத் தொடர்ந்து, பிரதேச சபைத் தவிசாளர் மே. வினோராஜ், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள் சகிதம் நேற்று சிகை அலங்கார நிலையங்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, மாணவர்களுக்கு முறையாக முடி வெட்டாத மற்றும் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்ட இரண்டு நிலையங்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு தவிசாளர் உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தவிசாளர் மே. வினோராஜ்: "எமது பிரதேசத்தில் உள்ள சுமார் 24 சிகை அலங்கார நிலையங்களின் உரிமையாளர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடி, மாணவர்களுக்கு முறையான வகையில் முடி வெட்ட வேண்டும் எனத் திட்டங்களை வகுத்திருந்தோம்.
அதனை மீறுவோரின் வர்த்தக அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்திருந்தோம். மாணவர்களின் ஒழுக்கத்தை பாதிக்கும் வகையில் விசித்திரமான வடிவங்களில் முடி வெட்டுவதை அனுமதிக்க முடியாது.
சமூகச் சீர்கேடுகளுக்கு சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் துணை போனால், எதிர்காலத்தில் அத்தகைய அனைத்து நிலையங்களும் நிரந்தரமாக மூடப்படும் எனத் தெரிவித்தார்.