பல உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் காரைதீவு விபுலானந்த மைதான அரங்கு!
அம்பாறை மாவட்டத்தில் முக்கிய விளையாட்டு மையமாக விளங்கிய காரைதீவு விபுலானந்த மைதானம், அ இன்று அலட்சியத்தின் சின்னமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அம்பாறை காரைதீவு விபுலானந்த விளையாட்டு மைதானத்திலுள்ள விளையாட்டு அரங்கு படுமோசமான சேதநிலைக்கு தள்ளப்பட்டு, உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

கூரை முற்றாக சேதமடைந்துள்ளது
மைத்தானத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் அது உள்ளதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு இரட்சண்யசேனை எனும் அமைப்பினால் 1 கோடி 30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த அரங்கு, கடந்த பல ஆண்டுகளாக எந்தவிதமான முறையான பராமரிப்புமின்றி கைவிடப்பட்டுள்ளது.
மைதானத்தின் கூரை முற்றாக சேதமடைந்துள்ளது. தகரங்கள் காற்றில் அள்ளுண்டன. பல தகரங்கள் எந்த வேளையிலும் கீழே விழக்கூடிய அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாது அரங்கில் உள்ள அறைகள் கதவுகள் இன்றி பாதுகாப்பற்று அசுத்தமாக காணப்படுகின்றன.
அதேசமயம் அண்மையில் மூன்று கிரிக்கெட் கயிற்று பாய்கள் தீக்கிரையானதும் தெரிந்த கதைதான். அங்குள்ல மலசலகூடங்களும் அவ்வாறே சேதமடைந்துள்ள நிலையில், பொது மக்கள் மழைக்கோ ,வெயிலுக்கோ ஒதுங்க முடியாத ஒர் அரங்காக காட்சியளிப்பது கண்டனத்துக்குரியது.
யாழில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் மீது தாக்குதல்; இலங்கை வரை தொடர்ந்த ஆலய பிரச்சனை! வெளிவந்த உண்மைகள்
அரங்கின் சுற்றுப்பகுதிகளும் சேதமடைந்துள்ள நிலையில் தினசரி இங்கு விளையாடி வரும் மாணவர்கள் மற்றும் விளையாட்டு கழக இளைஞர்கள் விபத்துகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகிறது.
ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதற்கான பொறுப்பை ஏற்கப்போவது யார்? என்பதே காரைதீவு மக்களின் கேள்வியாக உள்ளது. காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல தடவைகள் இது குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இந்நிலை கொண்டு செல்லப்பட்ட போதிலும், இதுவரை எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை என்பது அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக பிரதேச மக்கள் சாடுகின்றனர்.