ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள்: விசாரணைகள் வேண்டும்! ஐ.நா
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர், இலங்கையில் மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டம் சர்வதேச ரீதியில் கவனத்தைப் பெற்றிருந்தது.
அது தொடர்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
தமது தலைவர்களிடம் ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கோருகின்ற இலங்கை மக்களுக்கு நாம் எமது ஆதரவை வெளிப்படுத்துகின்றோம்.
ஊடகவியலாளர்கள் மற்றும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை முன்னெடுப்பதும், அச்சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின்முன் நிறுத்தவேண்டியதும் அவசியமாகும்.
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இதனை உரியவாறு கையாள்வதுடன், இதற்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச தரப்பினருடன் செயற்திறன்மிக்க பேச்சுவார்த்தைகளைத் தொடரக்கூடிய சட்டபூர்வமான சீரான அரசாங்கமொன்றை நிறுவவேண்டிய தேவை காணப்படுகின்றது.
உணவுப்பாதுகாப்பு, விவசாயம், வாழ்வாதாரம் மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினருக்கு அவசியமான சுகாதாரசேவைக் கிடைப்பனவு ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பதுடன் அவற்றை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் தற்போதைய நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை உன்னிப்பாக அவதானம் செலுத்தவருவதுடன், அவசியமான உதவிகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் தயாராக இருக்கின்றோம்.
அதுமாத்திரமன்றி நாம் உலகநாடுகளை வலியுறுத்துவதைப்போன்று மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கையையும் வலியுறுத்துகின்றோம் என்று அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.