கஜ்ஜாவின் கொலை பின்னணியை வௌியிட்ட பெக்கோ சமன்
கஜ்ஜா கொலை செய்யப்பட்டதன் பின்னர் பல குற்றவாளிகள் அதனை பொறுப்பேற்கத் தயாராக இருந்தபோதிலும், அவருடன் இரண்டு குழந்தைகளும் அங்கு கொல்லப்பட்டமையினால் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கியிருந்ததாக பெக்கோ சமன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணையின் போதே அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
தமது போதைப்பொருள் வலையமைப்பை வெளிப்படுத்தியதன் காரணமாகவே தாம் கஜ்ஜாவைக் கொலை செய்ததாக பெக்கோ சமன் கூறியுள்ளார்.
தம் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காகவே கஜ்ஜாவின் மனைவியின் வங்கிக் கணக்கில் மூன்றரை லட்சம் ரூபாயை வைப்பில் இட்டதாக பெக்கோ சமன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் கஜ்ஜாவின் குடும்ப உறுப்பினர்களுடன் தாம் உறவை ஏற்படுத்த முற்பட்டதாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
கஜ்ஜாவின் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்யும் எண்ணம் தமக்கு இருந்திருக்கவில்லை என்றும் பெக்கோ சமன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, கஜ்ஜாவின் கொலை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று சம்பத் மனம்பேரி விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
பெக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு கொலைக்கு துப்பாக்கிகளை வழங்கியதாகவும், ஆனால் அவை கஜ்ஜாவைக் கொல்ல வழங்கப்பட்டதா என்பது தனக்குத் தெரியாது என்றும் சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பத் மனம்பேரி அளித்த வாக்குமூலங்களை உறுதி செய்ய மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கஜ்ஜா கொல்லப்பட்ட காலகட்டத்தில் சம்பத் மனம்பேரியின் தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொள்வதற்கும் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும் கஜ்ஜா கொலையில் இதுவரை எந்த அரசியல்வாதியும் ஈடுபட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.