2 வயது சிறுமி கொடூர மரணம் ; பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை
ஹோமாகம, மாகம்மன பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், அவர் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதும், தலையில் ஏற்பட்ட பலத்த காயமே மரணத்திற்கு காரணம் என்பதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஹோமாகம ஆதார மருத்துவமனையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பணீத செனவிரத்னவினால் கடந்த 15 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலதிக விசாரணை
மாகம்மன, சமகி மாவத்தையைச் சேர்ந்த 2 வயது 4 மாதங்கள் மதிக்கத்தக்க சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி தனது தாய் மற்றும் மூத்த சகோதரனுடன் வசித்து வந்துள்ளார்.

தந்தை இவர்களை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், தாய் வேறொரு நபருடன் தகாத உறவை வைத்திருந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக தாயின் கள்ளக்காதலன் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இதன்போது, பிள்ளைகளால் தமக்கு இடையூறு ஏற்படுவதாகக் கருதிய தாயும் அந்த நபரும், சிறுமிக்கு அடிக்கடி வசைகளைத் திட்டியும், உடல் ரீதியான தாக்குதல்களை நடத்தியும் வந்துள்ளனர். சிறுமி உயிரிழப்பதற்கு முந்தைய நாள் அதிகாலையிலும் அந்த நபர் சிறுமியைத் தாக்கியுள்ளார்.
பின்னர் மறுநாள் காலை சிறுமியை வெளியே அழைத்துச் சென்றவர், மாலையில் மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுமிக்கு ஏதோ ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஹோமாகம ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஹோமாகம பதில் நீதவான் பத்மசிறி ஜயவர்தன மருத்துவமனைக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், விசேட சட்ட வைத்திய அதிகாரி மூலம் பிரேத பரிசோதனையை நடத்துமாறு மத்தேகொட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
சிறுமியின் தலை ஒரு மழுங்கிய மேற்பரப்பில் மோதியதால் மூளைக்கு ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் அவர் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான சித்திரவதைகளே இந்த மரணத்திற்கு நேரடி காரணம் என மருத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மத்தேகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.