மகனின் வெறிச்செயலால் அதிர்ந்த கிராமம்; சாக்கு மூட்டைகளில் கிடைத்த தந்தை, சித்தியின் உடல் பாகங்கள்
சேலம் அருகே தந்தை, சித்தியை தலை துண்டித்து படுகொலை செய்து, உடல் பாகங்களை 3 மூட்டைகளில் கட்டி 2 ஏரியில் வீசிய மகனை பிடித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ் (23) என்ற மகன் உள்ளார்.
தலையை துண்டித்து படுகொலை
கடந்த 4 ஆண்டுக்கு முன் பழனிசாமியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் மனைவி ஜெயந்தி, பிரிந்து சேலத்திற்கு வந்து தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து பழனிசாமி, இரண்டாவதாக ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருடன் முதல் கணவரின் 18 வயது மகளும் வசித்துள்ளார்.
கடந்த 5 நாட்களாக பழனிசாமி, ஜெயலட்சுமியின் நடமாட்டம் இல்லை. இருவரும் வெளியூர் சென்று விட்டதாக ஆகாஷ் கூறியிருக்கிறார். சந்தேகம் அடைந்த உறவினர்கள், மகுடஞ்சாவடி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸார், ஆகாசை பிடித்து விசாரித்த போது, தந்தை பழனிசாமி, சித்தி ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் தலையை துண்டித்து படுகொலை செய்து, உடல் பாகங்களை 3 சாக்கு மூட்டைகளில் கட்டி 2 ஏரியில் வீசிவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து ஏரிக்குள் இருந்து துண்டாடப்பட்ட உடற்பாகங்களை பொலிஸார், மீட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.