முன்னெப்போதும் இல்லாத அதிரடி பாதுகாப்பு ; இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக பரபரப்பாகும் கொழும்பு
கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 20க்கு 20 உலகக்கிண்ணப் போட்டிக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய போட்டியின் போது,எந்த அவசர சூழ்நிலையிலும் பயன்படுத்த இலங்கை வான்படையின் பல உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு பாதுகாப்பு
கூடுதலாக, காவல்துறை, கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் அரச புலனாய்வு சேவை உட்பட 2800 அதிகாரிகள், "கண்காணிப்பு கடமைகளுக்காக" மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
பொலிஸ் இணையக் குற்றப் பிரிவின் ஒரு குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 750 இலங்கை இராணுவ வீரர்கள் கொண்ட குழுவும் மைதானத்திற்கு அருகில் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க சிறப்பு "ட்ரோன் நடவடிக்கை" ஒன்றை நிறுவ வான்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேமதாச மைதானத்திற்கு அருகில் எங்கும் அங்கீகரிக்கப்படாத ஆளில்லா வானூர்திகள் பறக்கவிடப்படுவதை உறுதிசெய்ய தடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை மைதானத்திற்கு அருகில் நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் சிறிது தொலைவில் அமைந்துள்ள நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்த வாகன நிறுத்துமிடங்களிலிருந்து அவர்களை மைதானத்திற்கு அழைத்துச் செல்லவும், வெளியே அழைத்துச் செல்லவும் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,இந்திய-பாகிஸ்தான் போட்டிக்கான விரிவான பாதுகாப்பு நடவடிக்கை நேற்று மாலை மைதானத்தின் சுற்றுப்புறத்திலும் உள்ளேயும் சோதனை நடவடிக்கையுடன் தொடங்கியுள்ளது.
போட்டிக்குப் பின்னர் கடைசி பார்வையாளர் மைதானத்தை விட்டு வெளியேறும் வரை சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடரும் என பாதுகாப்பு தரப்புகள் தெரிவித்துள்ளன.