அஜித்தின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் விஜய்
நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பின் காரணமாக நேற்று (30) காலை காலமானார்.இந்த நிலையில், அஜித் குமாரின் தாயார் மோகினி மணியின் உடலுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று (சனிக்கிழமை) இரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் குடும்பத்தின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மோகினி மணியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன், அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, மோகினி மணி மறைவு தொடர்பில் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என முதல்வர் விஜய் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, வெளிநாட்டில் இருந்த அஜித் குமார் தாயாரின் மறைவைத் தொடர்ந்து அவசரமாக நாடு திரும்பி குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.
மோகினி மணியின் மறைவு தமிழ் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.