விஜய் அரசின் முக்கிய நியமனம் ; நிதித்துறையை வழிநடத்த வருகிறார் சித்திக்
தமிழக நிதித்துறையின் புதிய செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.ஏ. சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அரசின் முக்கியத் துறைகளில் ஒன்றான நிதித்துறைக்கு நீண்டகால அனுபவமுள்ள அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
1995 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த எம்.ஏ. சித்திக், கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
சென்னை ஐஐடியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்றுள்ள அவர், நிர்வாகத் திறன் மற்றும் நிதியியல் அனுபவத்திற்காக அறியப்படுகிறார்.

நிதித்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட சித்திக், 1999 முதல் 2002 வரை நிதித்துறையின் துணைச் செயலாளராகப் பணியாற்றியபோது மாநில பட்ஜெட் தயாரிப்பில் முக்கிய பங்காற்றினார்.
பின்னர் 2017 முதல் 2019 வரை நிதித்துறையின் செலவினப் பிரிவின் முதன்மைச் செயலாளராக இருந்து, மாநில நிதிநிலை, கடன் மேலாண்மை மற்றும் வருவாய் திட்டமிடல் போன்ற முக்கிய அம்சங்களை கவனித்தார்.
இதற்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றிய அவர், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகளை விரைவுபடுத்துவதிலும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டுவதிலும் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், வணிகவரித்துறை ஆணையராக இருந்தபோது ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிந்தைய வருவாய் நிர்வாகத்தை சீரமைப்பதிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார்.
மாவட்ட நிர்வாக அனுபவமும் கொண்ட சித்திக், தருமபுரி மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.
2009 முதல் 2014 வரை மத்திய அரசின் உள்துறை மற்றும் நிதி அமைச்சகங்களின் கீழும் பணியாற்றி தேசிய அளவிலான நிர்வாக அனுபவத்தை பெற்றுள்ளார்.
விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் கொண்ட அவர், பேட்மிண்டன் போட்டிகளில் தீவிர ஈடுபாடு கொண்டவராக அறியப்படுகிறார்.
இந்திய பேட்மிண்டன் அணியின் மேலாளராக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற அனுபவமும் அவருக்கு உள்ளது.
முதல்வர் விஜய்யின் தலைமையிலான அரசில் நிதித்துறைச் செயலாளராகப் பொறுப்பேற்கும் எம்.ஏ. சித்திக்கிற்கு மாநில நிதிப்பற்றாக்குறையை குறைப்பது, புதிய நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
தற்போதைய நிதித்துறைச் செயலாளர் டி. உதயச்சந்திரனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஏ. சித்திக் விரைவில் தனது புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளார்.
அவரது நிர்வாக அனுபவமும் நிதியியல் நுணுக்கமும் தமிழக அரசின் பொருளாதார நிர்வாகத்திற்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.