இலங்கையில் சமூக வலைதளங்களில் பரவிவரும் குழந்தையை தாக்கும் காணொளி! அதிரடி நடவடிக்கை
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவிவரும் குழந்தை ஒன்றை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து தாக்கப்படும் காட்சிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் சில காட்சிகள் பரப்பப்பட்டு பின்னர் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதய குமார அமரசிங்க மேலும் தெரிவித்தார்.