பிரபல கோயில் திருவிழாக்களில் கைவரிசை ; யாழில் சிக்கிய இந்திய, இலங்கை பெண்கள் குழு
நாட்டின் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த இரண்டு இந்திய பெண்கள் உட்பட எட்டு பெண்கள் அடங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள கோயில் மற்றும் தேவாலயங்களில் திருவிழாக்களின்போது, நகைகளை கொள்ளையிடும் நோக்கில் இந்தியாவிலிருந்து வந்த இரண்டு பெண்கள் உள்ளடங்கிய குழுவொன்று, மேலும் சில இலங்கைப் பெண்களுடன் இணைந்து செயற்படுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெண்கள்
இந்த குழு விசேடமாக மடு தேவாலய திருவிழா, நல்லூர் கோயில் திருவிழா, கோணேஸ்வரம் ஆலய திருவிழா மற்றும் தலவில தேவாலய திருவிழா போன்றவற்றை இலக்கு வைத்து செயற்பட்டதாக சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொதுவாக, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பெண்கள் இதுபோன்ற விழாக்களுக்கு அதிக அளவில் தங்க நகைகளை அணிந்து வருவது வழமையாகும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட பெண்கள் குழு, தங்க நகை கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கு சில ஆண்களும் உதவுவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார்.
இந்தநிலையில், மடு தேவாலய திருவிழாவில் 10க்கும் மேற்பட்ட பெண்களின் தங்க நகைகள் திருடப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.75 லட்சத்துக்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட பெண்களுக்கும் மடுவில் கைது செய்யப்பட்ட குழுவிற்கும் இடையே தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்திய பெண்களுடன் கைது செய்யப்பட்ட மற்ற பெண்கள் குறிசொல்லும் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பதும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.