வெருகல் - புன்னையடி இழுவைப் படகு ; ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மக்கள்
ஆபத்துமிக்க திருகோணமலை, வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவையினை வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச சபையின் உதவித் தவிசாளர், உறுப்பினர்கள் நேற்று (10) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
ஆபத்துமிக்க புன்னையடி இழுவைப் பாதையினை வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

அத்தோடு பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்கு செல்வதற்கு இப்பாதையூடாக சென்று வருகின்றனர். புன்னையடியில் பாலம் இல்லாமையினால் சுமார் 60 மீற்றர் தூரம் இம் மக்கள் இழுவைப் பாதை மூலம் அச்சத்துக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.

இவ்வருடம் வரவு செலவுத் திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் கிண்ணியா -குறிஞ்சாக்கேணி படகு விபத்து போன்று இன்னுமொரு விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் புன்னையடியில் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி இவ் கள விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
