இலங்கையில் எம்.ஜி.ஆருக்கு நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் உதவியைக் கோருகிறார் எஸ்.பி. வேலுமணி!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த இலங்கையின் நாவலப்பிட்டி அருகிலுள்ள இல்லத்தைப் புனரமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னமாக மாற்றுவதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர் பிறந்த இல்லத்தை நினைவுச் சின்னமாக மாற்றுவதற்கு இலங்கை அரசிடம் உரிய அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனுமதியை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசும் இந்தத் திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனுமதி கிடைத்தவுடன், குறித்த இல்லத்தைப் புனரமைத்து பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் வரலாற்றையும் அவரது நினைவுகளையும் போற்றும் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.