வாகன இறக்குமதி வரி விவகாரம் ; அரசுக்கு 20 பில்லியன் ரூபா வரி இழப்பு
அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட வாகன இறக்குமதி வரி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு சில வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே கசிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மத்திய வங்கியின் முன்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 15ஆம் திகதி வெளியிட்ட விசேட வர்த்தமானி மூலம் வாகன இறக்குமதிக்கு 50 சதவீத மேலதிக வரி விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

எனினும், அந்த நாளுக்கு முன்பாக அல்லது அதே நாளில் கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்ட வாகனங்களுக்கு பழைய வரி விகிதமே நடைமுறையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், வர்த்தமானி வெளியிடப்படுவதற்கு முன்பே சில முக்கிய வர்த்தகர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கான கடன் கடிதங்களை திறந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஒரு வர்த்தகர் 3,500 வாகனங்களுக்கும் மற்றொருவர் 500 வாகனங்களுக்கும் பழைய வரி விகிதத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சுமார் 40 பில்லியன் ரூபா பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதன் விளைவாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 323 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளால் அரசாங்கத்திற்கு 20 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இது சாதாரண விடயம் அல்ல, பாரிய மோசடி இந்த கொடுக்கல் வாங்கல்களை மத்திய வங்கி ஏன் கண்காணிக்கவில்லை என்பது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.