வீட்டு பூஜை அறையில் சிவன் படத்தை வைத்து வழிபடலாமா?
சிவ பக்தர்களுக்கும் சிவ சின்னங்கள், சிவனின் படம், ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சிவனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற குழப்பமும் சிலருக்கு இருக்கும்.
சிலரின் வீடுகளில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்வார்கள். ஆனால் சிவ லிங்கம் வைத்து வழிபடுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது அவற்றை சரியாக பின்பற்ற முடிந்தால் மட்டுமே வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபட வேண்டும்.
சிவனின் சில ரூபங்களை வீட்டில் வைத்தால் பணம் வீட்டில் தங்காமல், செலவாகிக் கொண்டே இருக்கும். அதோடு பலவிதமான கஷ்டங்களும் வந்து சேரும். வீட்டில் சிவலிங்கம் வைத்திருந்தால் தினமும் அதற்கு முறையாக பூஜை செய்ய வேண்டும். இல்லை என்றால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
சிவ பெருமான் கோபமாக இருப்பது போலவோ அல்லது ருத்ர தாண்டவம் ஆடுவது போலவோ அல்லது சம்ஹாரம் செய்வது போன்ற படங்களை வீட்டில் வைக்கக் கூடாது.
அதே போல் தாண்டவ மூர்த்தியான நடராஜரின் படத்தையோ அல்லது சிலையையோ வீட்டில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் பணம் தங்காது. தாண்டவ மூர்த்தி கோலம் என்பதும் உக்கிர வடிவம் என்பதால் அதை வீட்டில் வைப்பது நல்லதல்ல.
வாஸ்து சாஸ்திரப்படி சிவனின் படங்களை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமானது. இதனால் வீட்டில் அமைதியும், செல்வ வளமும் நிறைந்திருக்கும். ஆனால் சிவனின் அருளை முழுவதுமாக பெற வேண்டுமானால் சில முக்கியமான விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும்.சிவபெருமானின் நிதானமான புகைப்படத்தை வீட்டில் வைத்திருப்பது சிறந்தது.
சிவபெருமானின் நிதானமான புகைப்படத்தை வழிபடுவதன் மூலம் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி உங்கள் கனவுகள் நிறைவேறும். புராணங்களின்படி, சிவபெருமானின் புகைப்படத்தை வடக்கு திசையில் வைத்து வழிபடுவது நல்லது என்பது ஐதீகம்.