யாழில் எல்லை தாண்டி பலாலி பொலிஸார் அட்டகாசம்; மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸார் எல்லை தாண்டி வந்து, சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் – ஈவினை பகுதியில் மக்களுடன் முரண்பட்டதாக கூறப்படுகின்றது.
பொது மக்களிடம் , இலஞ்சம் பெறுவதற்காகவே இவ்வாறு பொலிஸார் எல்லை தாண்டி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில்,

மதுபோதையில் அராஜகம்
நான் எனது வயலுக்கு அருகாமையில் எனது காணியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது காணிக்குள் அத்துமீறி உள்நுழைந்த பலாலி பொலிஸார் நான் மதுபோதையில் நிற்பதாக தெரிவித்து முரண்பட்டதுடன் எனது ஆடையையும் கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதன்போது நான் ஊர் மக்களை துணைக்கு அழைத்தவேளை, பொலிஸார் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு மேற்கொண்டு ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அந்த இடத்திற்கு வரவழைத்தனர்.
இதன்போது ஏனைய பொலிஸாரும் அவ்விடத்திற்கு வந்து அட்டகாசம் செய்தபோது நாங்கள் அதனை காணொளி பதிவு செய்ய முற்பட்டவேளை காணொளி அடுக்க விடாமல் தடுத்தனர்.
அதேசமயம் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சற்று தொலைவில் ஒரு மதுபான நிலையம் உள்ளது. அங்கு மதுபானம் பாவித்து விட்டு வருபவர்களிடம் இலஞ்சம் பெறுவதற்காக பலாலி பொலிஸார் எல்லை தாண்டி வீதியில் வந்து நிற்பது வழமை என்றும், பாதிக்கபப்ட்டவர் கூறியுள்ளார்.
எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தகட்டு இலக்கமோ, அல்லது பெயர் பட்டியோ அணிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.