பொருளாதார நெருக்கடிக்குப் பின் இலங்கையில் ADB-யின் புதிய திட்டம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளராக ஷனொன் கௌலின் (Shannon Cowlin) இன்று (09) கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கையின் நீண்டகால மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளியாகத் திகழும் ஆசிய அபிவிருத்தி வங்கி, கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடிகளின் போது நாட்டுக்கு வழங்கிய ஆதரவை கௌலின் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.

'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி அதன் நெகிழ்ச்சித் தன்மையை வலுப்படுத்துவதற்கும் தாம் அரசாங்கத்துடனும் அபிவிருத்திப் பங்காளர்களுடனும் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றப் போவதாக அவர் உறுதியளித்தார்.
ஷனொன் கௌலின் சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச தொழில்முறை அனுபவம் கொண்டவர். இதில் 13 ஆண்டுகள் ஆசிய அபிவிருத்தி வங்கியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
இலங்கைக்கு வருவதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டு முதல் மங்கோலியாவிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடப் பணிப்பாளராகப் பணியாற்றி அந்த நாட்டின் மூலோபாய நடவடிக்கைகளை வழிநடத்தினார்.