பொலன்னறுவையில் வேன் திருட்டு முறியடிப்பு ; சந்தேகநபர் கைது
பொலன்னறுவை பகுதியில் திருடப்பட்ட வேன் ஒன்றை அதிகாலை வேளையில் அங்கிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இருவரின் முயற்சியை பொலிஸார் முறியடித்துள்ளனர்.
4 மணி நேர துரத்தல்
கிரித்தலே விகாரைக்கு அருகில் இரவு சுமார் 10 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் வேன் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
எனினும், பொலிஸார் அங்கு செல்வதற்கு முன்னரே சந்தேகநபர்கள் வேனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

வேனில் எரிபொருள் குறைவாக இருந்ததாகவும், இதனால் சந்தேகநபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்குச் செல்லக்கூடும் எனவும் பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.
இதையடுத்து, ஜெயந்திபுர, மின்னேரியா மற்றும் தியபெதும பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், தியபெதும பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த வேனுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிஸார் வேனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அதிகாலை 4.30 மணி வரை கிரித்தலே மற்றும் தியபெதும பகுதிகளில் உள்ள கிராமப்புற வீதிகளில் பொலிஸார் வேனை தொடர்ந்து சென்றபோதிலும், அதனை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
பின்னர், பகமூன பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையை நோக்கி வேன் சென்றபோது, பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது, வேனில் இருந்த இரு சந்தேகநபர்களும் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், பிலியந்தலை பகுதியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பியோடிய மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.