யாழில் குண்டும் குழியுமான வீதிகளால் விபத்து
யாழ்ப்பாணம் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்துள்ள பிரதான வீதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ள போதிலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
782ஆம் வழித்தடமான யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியின் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சுமார் 15 அடி நீளத்திற்கு வீதியின் முழு அகலமும் சேதமடைந்துள்ளது.

விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள்
வீதியின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் சேதமடைந்து, சில மாதங்களுக்கு முன்னர் நீர் வீதியை ஊடறுத்து பாய்ந்துள்ளது. பின்னர் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்ட போதிலும், வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் காப்பெற் உடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதியூடாக மூன்று பேருந்து வழித்தடங்களில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதுடன், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேதமடைந்துள்ள குறித்த பகுதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இந்த வீதி உடனடியாக சீரமைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, மேலும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.