வைகைப்புயல் வடிவேலு பட நடிகருக்கு ஆயுள்தண்டனை!
நடிகர் வடிவேலுவுடன் 'எலி' திரைப்படத்தில் நடித்த துணை நடிகர் ஒருவருக்கு சிறுமியை துஸ்பிரயோகித்த சம்பவத்தில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அடுத்த சோழவந்தான் அடுத்த முள்ளிப்பள்ளம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பக்தன் என்கிற நாச்சியப்பன் (49). இவர், 'எலி' உள்ளிட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்து உள்ளார்.
இவர், கடந்த 2017-ம் ஆண்டு சிறுமி ஒருவரை ஏமாற்றி மிட்டாய் மற்றும் பலகாரம் வாங்கிக் கொடுத்து ஒரு மாதத்திற்கு மேலாக வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் தென்கரையைச் சேர்ந்த டிரை சைக்கிள் ஓட்டுநரான மணிகண்டனும் (28) சிறுமியை மிரட்டி தொந்தரவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சோழவந்தான் பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பக்தன் என்கிற நாச்சியப்பன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட நாச்சியப்பன், மணிகண்டன் ஆகியோர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.